கோவை:கோவை சிங்காநல்லூரில் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்ததாக அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து 46 டோக்கன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து அதிமுக முத்திரை பதிக்கப்பட்ட டோக்கன்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழு அலுவலர் மங்களசத்யா (37) தலைமையிலான குழுவினர் கடந்த 17-ம் தேதி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாப்பநாயக்கன்பாளையம் குப்பண்ணா வீதி பகுதியில் அதிமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக மாவட்ட கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், பறக்கும் படை அலுவலர் மற்றும் குழுவினர் இரவு 8.30 மணியளவில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்பாக அதிமுகவைச் சேர்ந்த 4 பேர் நின்றுகொண்டு டோக்கன்களை விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அதிகாரிகளைக் கண்டதும் அங்கிருந்த இருவர் தப்பியோடினர்
அங்கிருந்த பிரவீன் குமார் மற்றும் சுஜாதா ஆகிய இருவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த 46 அதிமுக டோக்கன்கள், வாக்காளர் விவரங்கள் அடங்கிய 3 நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் குறித்து பறக்கும் படை அலுவலர் மங்களசத்யா அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் பிரவீன் குமார் மற்றும் சுஜாதா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


