கோவை: கார்த்திகை மாதம் துவங்கியதை முன்னிட்டு கோவை இறைச்சி கடைகளில் 50 சதவீத அளவுக்கு வியாபாரம் குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கார்த்திகை மாதம் நேற்று முன்தினம் துவங்கியது. இதையடுத்து பல பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு விரதம் கடைபிடித்து வருகின்றனர். இந்த காலத்தில் வழக்கமாக கோழி, ஆடு, மாடு இறைச்சி மற்றும் மீன் விற்பனையகங்களில் வியாபாரம் சற்று குறைந்தே காணப்படும்.
இந்த ஒரு மாத காலமும் பல வீடுகளில் அசைவத்திற்கு தடை போடுவதுண்டு. இதன் காரணமாக தற்போது இறைச்சிக்கடைகளில் வியாபாரம் மந்தமாக உள்ளது.
இது குறித்து போத்தனூரை சேர்ந்த ஆட்டிறைச்சி கடை உரிமையாளர் கணேசன் கூறியதாவது:
கார்த்திகை மாதத்தில் பலர் அசைவம் எடுக்க விரும்புவதில்லை. ஆண்டுதோறும் இந்த மாதத்தில் மட்டும் வியாபாரம் குறைவாக இருக்கும். கடந்த தீபாவளியையொட்டி ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. தற்போது ரூ.100 குறைந்து ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனையாகிறது. நேற்று முன்தினம் கார்த்திகை மாதம் பிறந்ததால், இந்த வார ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனை குறையும். சுமார் 50 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.
இறைச்சி விற்பனை விலையை பொறுத்தவரை பெருமளவில் மாற்றம் இருக்காது. குறிப்பாக புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மாட்டிறைச்சி, மீன் விற்பனை குறிப்பிட்ட அளவில் இருக்கும்.
தற்போது அந்த பகுதிகளில் வியாபாரத்தில் பெருமளவில் மாற்றம் இருக்காது. மற்ற பகுதிகளில் வியாபாரம் குறையும். கார்த்திகை மாதம் முடிந்த சில நாட்களில் வியாபாரம் மீண்டும் பழைய நிலையை அடையும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், ஒரு கிலோ சிக்கன் ரூ.190 முதல் ரூ.220 வரையும் விற்பனையாகிறது. மீன் வகைகளை பொறுத்தவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்தி மீன் கிலோ ரூ.100க்கும், ரூ.1200க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன்கள் அளவை பொறுத்து கிலோ ரூ.900 வரை விற்பனையானது. இந்த விலை வரும் நாட்களில் இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு கோவையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வியாபாரம் மந்தமடைந்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் விரதம் கடைபிடிப்பதால் இறைச்சி விற்பனை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆட்டிறைச்சி விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ள நிலையில், கோழி மற்றும் மீன் விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


