கோவை : ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி, கோவையை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.2.97 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த 20-ம் தேதி ஆன்லைன் பகுதி நேர வேலை தொடர்பான விளம்பரம் ஒன்று வந்துள்ளது.
அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு இளம்பெண் பேசியுள்ளார். அப்போது மர்ம நபர்கள், ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ரிவியூ அளித்து, அதன் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய இளம்பெண், அவர்கள் கூறியபடி பொருட்களுக்கு ரிவியூ அளித்து ஸ்கிரீன் ஷாட்டுகளை அனுப்பி வந்துள்ளார். இதற்காக அவருக்கு முதலில் சிறிய அளவில் பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மர்ம நபர்கள், தொடர்ந்து முதலீடு செய்து பணிகளை மேற்கொண்டால் அதிக லாபம் கிடைக்கும் என இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர், மர்ம நபர்கள் தெரிவித்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 7 தவணைகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 558 பணத்தை அனுப்பியுள்ளார்.
ஆனால், பணத்தை அனுப்பிய பின்னர் அவருக்கு லாபத்தொகை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளம்பெண், மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தான் ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண், சம்பவம் குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் மர்ம நபர்களின் தொடர்பு விவரங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் பகுதி நேர வேலை ஆசை காட்டி கோவை இளம்பெண்ணிடம் ரூ.2.97 லட்சம் மோசடி.





