கோவை : கோவை நீதிமன்ற வளாகத்தில் வாலிபரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்து தாக்கியதாக அவரது மனைவி, மாமியார் உட்பட 4 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த் (39). இவரது மனைவி ரோகிணி பிரியா (35). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி வழக்கு விசாரணைக்காக அரவிந்த் மற்றும் அவரது மனைவி தரப்பினர் கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது, ரோகிணி பிரியா, அவரது தாயார் உஷா நந்தினி மற்றும் உறவினர்களான ஜெகநாதன், ரஞ்சித் குமார் ஆகியோர் அரவிந்தின் அருகே சென்றுள்ளனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அரவிந்தை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும், ரஞ்சித் குமார் அரவிந்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த், சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ரோகிணி பிரியா, உஷா நந்தினி, ஜெகநாதன் மற்றும் ரஞ்சித் குமார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





