கோவை : கோவை உக்கடம் குளத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மிதந்த சம்பவம் குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகர் (30). இவர் உக்கடம் குளத்தில் மீன்பிடித்து, அதனை விற்பனை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, குளத்தின் நீரில் ஒருவர் முகம் குப்புற மிதந்து கொண்டிருப்பதை பார்த்து கிருபாகர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குளத்தில் மிதந்த உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சடலம் மிதந்து வந்த பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு ஒரு லுங்கி, சோப்பு மற்றும் சிறிய கருப்பு நிற பை ஆகியவை கிடந்தன. அந்த பையில் இருந்த ஆவணங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் திருப்பூர் மாவட்டம் பொயம்பாளையத்தைச் சேர்ந்த சூர்ணமூர்த்தி (62) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சூர்ணமூர்த்தி உக்கடம் குளத்திற்கு குளிக்க வந்தபோது தவறி நீரில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பெரியகடை வீதி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





