சிகப்பு பிடிக்கல, புளூ தான் வேணும்” – கோவையில் விசித்திரத் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு!

கோவை: கோவை பீளமேட்டில் சிவப்பு நிற R15 பைக்கைத் திருடிய நபர், அதை மற்றொரு பகுதியில் நிறுத்திவிட்டு, அங்கிருந்த நீல நிற R15 பைக்கைத் திருடிச் சென்றுள்ளார். இரண்டு வாகன உரிமையாளர்களும் அளித்த புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு டைடல் பார்க் அருகேயுள்ள தண்ணீர்பந்தல் சாலையில், நவம்பர் 1-ஆம் தேதி அதிகாலை சுமார் 3.15 மணிக்கு நிறுத்தப்பட்டிருந்த சிவப்பு நிற யமஹா R15 பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.

Advertisement

அந்த பைக்கில் அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதிக்குச் சென்ற அவர், அதிகாலை 3.30 மணியளவில் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர், அந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நீல நிற R15 பைக்கைத் திருடிக்கொண்டு தப்பியுள்ளார்.

காலையில் வீட்டிற்கு வெளியே வந்த நீல நிற பைக்கின் உரிமையாளர், தனது வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதே நேரத்தில், வீட்டின் முன்பு வேறொருவருக்குச் சொந்தமான சிவப்பு நிற R15 பைக் நின்றிருந்ததால் குழப்பமடைந்துள்ளார்.

Advertisement

இதற்கிடையே, தண்ணீர்பந்தல் பகுதியில் பைக்கைப் பறிகொடுத்த உரிமையாளரும், கோல்டுவின்ஸ் பகுதியைச் சேர்ந்த உரிமையாளரும் பீளமேடு காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்தனர்.

புகார்களின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தண்ணீர்பந்தல் பகுதியில் திருடப்பட்ட சிவப்பு நிற பைக், கோல்டுவின்ஸ் பகுதியில் விட்டுச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. சுமார் 15 நிமிட இடைவெளியில் நடைபெற்ற இந்த இரண்டு திருட்டுகள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

திருடிய பைக்கை விட்டுவிட்டு, அதே மாடலில் மற்றொரு பைக்கை எடுத்துச் சென்றதற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சம்பவ இடங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் போலீசார், அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா… திராவிடர் கழகம் ஏற்பாடு!

கோவையில் நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். நீலாம்பூரில் புதிய திமுக அலுவலகத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...