கோவை: கோவையில் நடப்பாண்டில் ஜூலை வரை 12,345 மின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் நகரமான கோவையில் ஆண்டுதோறும் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் மெல்ல மெல்ல மின் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.
கடந்த 2024-ம் ஆண்டு 6,850 மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை கடந்த 7 மாதங்களில் மட்டும் 12,345 மின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: காருக்குள் விளையாடிய 9 வயது சிறுவன்; கதவு தானாக மூடியதால் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
கோவையில் ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம், அவிநாசி சாலை, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சரவணம்பட்டி, பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில சார்ஜிங் நிலையங்கள் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நிலையும் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கோவை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 55 சார்ஜிங் மையங்கள் உள்ளன. ஆனால் அதிகரித்து வரும் மின் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read: நகையை திருட முயன்ற பக்கத்து வீட்டு பெண் கைது
கோவை ஆர்.டி.ஓ. அலுவலக புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2023-ம் ஆண்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின் வாகனங்கள், ஆட்டோக்கள் என மொத்தம் 7,033 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. 2024-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 6,849 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இறுதி வரை மொத்தம் 14,265 மின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் ஜூலை வரை மட்டும் 12,345 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப சார்ஜிங் நிலையங்கள் போதுமான அளவில் இல்லை என்பது வாகன ஓட்டிகளின் முக்கிய குறையாக உள்ளது. குறிப்பாக நகரின் உட்புற பகுதிகள் மட்டுமின்றி புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் பொது சார்ஜிங் நிலையங்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே, கோவை மாநகராட்சியும் டாடா பவர் நிறுவனமும் இணைந்து நகரில் புதிதாக 20 அதிவேக சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: போதைப்பொருளுக்கு எதிராக கோவை போலீசார் நடத்திய மாரத்தான்; குவிந்த மக்கள்!
மேலும், கோவை புறநகர் பகுதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சுற்றுலா மையங்களில் கூடுதல் சார்ஜிங் நிலையங்களை அமைக்க வேண்டும் என்றும், சார்ஜிங் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை பொதுமக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மின் வாகனங்களுக்கு ஆரம்பகட்ட விலை பெட்ரோல் வாகனங்களை விட அதிகமாக இருப்பது, பொது சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை மற்றும் பழைய மின் வாகனங்களுக்கான மறுவிற்பனை மதிப்பு குறைவாக இருப்பது போன்றவை மின் வாகனங்களின் பயன்பாட்டில் உள்ள முக்கிய சவால்களாக பார்க்கப்படுகின்றன.





