கோவை: கோவை செட்டிப்பாளையம் சாலையில் ஐடி ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன், வங்கி அட்டைகளை பறித்ததுடன், ரகசிய எண்ணை வாங்கி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7,500 பணத்தையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாண்டியூர் சவுராஷ்டிராபுரம் 4-வது வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா (21). இவர் கோவை ஈச்சனாரி ஏ.பி.எம். நகரில் வசித்து வருவதுடன், அங்குள்ள ஐடி பார்க்கில் வேலை செய்து வருகிறார். வழக்கமாக இரவு 11 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், 3 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஸ்ரீ கிருஷ்ணா செட்டிப்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள் அவரை திடீரென வழிமறித்துள்ளனர்.
பின்னர், கத்தியை காட்டி மிரட்டிய அந்த நபர்கள் ஸ்ரீ கிருஷ்ணாவிடம் இருந்த செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பறித்துள்ளனர். தொடர்ந்து, அவரை மிரட்டி வங்கி அட்டைகளின் ரகசிய எண்களையும் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, ஏடிஎம் மூலம் ஸ்ரீ கிருஷ்ணாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7,500 பணத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீ கிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஐடி ஊழியரை கத்திமுனையில் மிரட்டி பணம், பொருட்கள் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






