கோவை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களின் ஒப்பந்த முறையை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசை கண்டித்தும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நாளை முதல் ஏராளமான தூய்மை பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒப்பந்த முறையை முற்றிலும் ரத்து செய்து, தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கு மட்டும் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ள ரூ.50 உணவுப் படியை, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் ரூ.100-ஆக விரிவாக்கம் செய்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பணியாளர்களுக்கும் 8.33% அடிப்படையில் ஒரு மாத ஊதியத்தைப் போனஸாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு தடுப்புப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்கள் என லட்சக்கணக்கானோர் போராடி வருவதால், அரசு உடனடியாகச் சங்கத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திச் சுமுக உடன்பாடு காண வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.






