கோவை: கோவை அருகே சிறுமுகை வனப்பகுதியில் காலில் இரும்புக் கம்பி சிக்கி வலியால் அவதிப்பட்டு வந்த பெண் யானைக்கு, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சிறுமுகை அருகே பெத்திக்குட்டை, உளியூர் காப்புக்காடு பகுதியில் கடந்த 2-ம் தேதி வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த பெண் யானையின் இடது முன்னங்காலில் இரும்புக் கம்பி ஒன்று சிக்கியிருப்பதை வனத்துறையினர் கவனித்தனர். கம்பி சிக்கியதால் யானை நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக கோவை மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யானைக்கு சிகிச்சை அளிக்க உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் தலைமையில் சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர்கள் அடங்கிய சிறப்பு மீட்புக் குழு அமைக்கப்பட்டது.
குவிந்த மருத்துவர்கள், வனப் பணியாளர்கள்:
யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் இருந்து 5 கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் 60-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் மற்றும் யானைப் பாகன்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு:
காயமடைந்த யானை வனப்பகுதிக்குள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வந்ததால், அதன் நடமாட்டத்தை கண்காணிப்பதில் சவால் ஏற்பட்டது. இதையடுத்து நவீன ட்ரோன் கேமராக்கள் மூலம் யானை செல்லும் இடங்களை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
சரியான வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்று (செப். 6) வனப்பகுதிக்குள்ளேயே வைத்து பெண் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர்.
இரும்புக் கம்பி அகற்றம்:
யானை மயக்கமடைந்ததும், அதன் இடது முன்னங்காலில் ஆழமாகச் சிக்கியிருந்த இரும்புக் கம்பியை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பாக அகற்றினர். தொடர்ந்து, காயம் ஏற்பட்டிருந்த பகுதியில் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் அளிக்கப்பட்டன.
சிகிச்சை முழுமையாக முடிந்த பின்னர், யானைக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்டது. தற்போது பெண் யானை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே விடப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனப்பகுதியில் காயத்துடன் தவித்த யானையை ட்ரோன் மூலம் கண்காணித்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வனத்துறையினரின் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





