கோவை: கோவையைச் சேர்ந்த நடைபாதை இளநீர் வியாபாரியின் மகனும், 12ஆம் வகுப்பு பள்ளி மாணவருமான எம். தீபன் ராஜா, தேசிய அளவிலான தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற 17-வது தேசிய அளவிலான தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
கடுமையான போட்டி நிறைந்த சீனியர் 70 கிலோவுக்கு கீழ் எடைப்பிரிவில் பங்கேற்ற தீபன் ராஜா, தனது சிறப்பான ஆட்டத்திறனையும் கடின உழைப்பையும் வெளிப்படுத்தி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தீபன் ராஜாவின் மூத்த சகோதரர் திலக வர்ஷனும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற குவான் கீடோ தற்காப்புக் கலைப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்று கோவைக்கு திரும்பிய தீபன் ராஜாவுக்கு, ஆகஸ்ட் 26ஆம் தேதி அவர் வசிக்கும் இரத்தினபுரி பகுதி மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவன் தீபன் ராஜாவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
கோவை பள்ளி மாணவன் எம். தீபன் ராஜா, தேசிய அளவிலான தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.





