கோவை : கோவை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையிலான ஆபத்தான விதிமீறல்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட 1,498 பேரின் டிரைவிங் லைசன்சை தற்காலிகமாக ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதில் 78 பேரின் லைசன்ஸ் ஏற்கனவே 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிவேகம், சிக்னல் விதிமீறல், ஹெல்மெட் அணியாமல் செல்வது, செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்கள் விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன.
இதையடுத்து போக்குவரத்து போலீசார் தானியங்கி கேமராக்கள் மற்றும் வாகன தணிக்கை மூலம் விதிமீறல்களை கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தொகையை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அபராதத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், பலர் அபராதத்தை செலுத்தாமல் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிக எண்ணிக்கையில் அபராத சலான்கள் நிலுவையில் வைத்துள்ள வாகன ஓட்டிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 15 அபராத சலான்கள் நிலுவையில் வைத்துள்ள 1,149 பேரும், 20 அபராத சலான்கள் நிலுவையில் வைத்துள்ள 425 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள அபராதத்தை செலுத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
அபராதத்தை செலுத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எம்-பரிவாகன் செயலி, இ-சேவை மையம் மற்றும் பேடிஎம் உள்ளிட்ட வழிகளில் அபராதத்தை செலுத்தலாம். மேலும், வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசாரிடமும் அபராதத்தை செலுத்த முடியும். மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதத்தை நீதிமன்றத்தில் மட்டுமே செலுத்த முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து துணை கமிஷனர் மகேஸ்வரன் கூறியதாவது:
கோவை மாநகரில் வாகன விதிமீறல்களை கட்டுப்படுத்த தானியங்கி கேமராக்கள் மற்றும் போலீசாரின் வாகன தணிக்கை மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கையில் அபராத சலான்கள் நிலுவையில் வைத்துள்ளவர்களிடம் அபராதத்தை வசூலிக்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல, மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துதல், தொடர்ந்து விபத்துகளில் சிக்குவது உள்ளிட்ட ஆபத்தான விதிமீறல்களில் ஈடுபட்ட 1,498 பேரின் டிரைவிங் லைசன்சை தற்காலிகமாக ரத்து செய்ய ஆர்டிஓவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 78 பேரின் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட காலத்தில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தானியங்கி கேமராக்கள் மூலம் சில வாகனங்களுக்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதனை சரிசெய்யும் வகையில் எம்-பரிவாகன் செயலியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் தவறுதலாக விதிக்கப்பட்ட அபராதத்தை சரிசெய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.





