கோவை : சர்வதேச மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் முதியோருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், கோவை மத்திபாளையம் பகுதியில் உள்ள கோவை மாவட்ட முதியோர் நல சங்க இல்லத்தில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாமை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். முன்னதாக வழக்கறிஞர் மதிவாணன் வரவேற்றார்.
மருத்துவர்கள் சதீஷ், அபிநயா, சமீர் அஹமது மற்றும் கவுதம் ஆகியோர் முதியோருக்கான உடல்நல பராமரிப்பு குறித்து விளக்கினர். குறிப்பாக பல், காது, மூக்கு மற்றும் தொண்டையை எவ்வாறு பராமரிப்பது, குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று மற்றும் காய்ச்சலில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
தொடர்ந்து, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பொறுப்பு செயலாளரும், முதலாவது கூடுதல் சார்பு நீதிபதியுமான செந்தில்குமார், முதியோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் முதியோருக்கு வழங்கப்படும் சட்ட உரிமைகள் குறித்து விளக்கினார்.
மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி பேசுகையில், சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கியத்துவம், முதியோரின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் முதியோருக்கு வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் போது முதியோருக்கான சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் இல்ல வாசிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், முகாமின் ஒரு பகுதியாக நடைபெற்ற நடமாடும் மருத்துவ முகாமில் முதியோருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளையும் மாவட்ட முதன்மை நீதிபதி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பொறுப்பு செயலாளரும், முதலாவது கூடுதல் சார்பு நீதிபதியுமான செந்தில்குமார் செய்திருந்தார்.
Legal awareness and medical camp for senior citizens held in Coimbatore





