கோவை : கோவை வடவள்ளியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி சுல்தானியாபுரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவரது மனைவி ராஜேஸ்வரி (24). இவர்களது 10 மாத ஆண் குழந்தை ராஜவேலு, கடந்த நான்கு மாதங்களாகச் சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாகக் குழந்தைக்குத் தோல் ஒவ்வாமையும் காய்ச்சலும் இருந்துள்ளன.
கடந்த 22-ஆம் தேதி குழந்தைக்குக் கடுமையான நெஞ்சுச் சளியும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டன. இதையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவில்மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.
அங்கு ஆக்சிஜன் அளித்தும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட பெற்றோரும் குடும்பத்தினரும் கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.


