கோவை : கோவை குறிச்சி அருகே ரோந்து பணியில் இருந்த காவலரின் சீருடையைப் பிடித்து இழுத்துத் தள்ளியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக 37 வயது இளைஞரை சுந்தராபுரம் போலீசார் கைது செய்தனர்.
கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியாற்றி வருபவர் சஞ்சீவ்காந்தி. இவர் கடந்த 22-ஆம் தேதி காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாருடன் குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், அரவான் கோயில் திருவிழா தொடர்பாக சஞ்சீவ்காந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து, அவரது சீருடையைப் பிடித்து இழுத்துத் தள்ளியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், யாராவது தடுக்க வந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆய்வாளர் ரமேஷ்குமார் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். விசாரணையில் அவர் குறிச்சி காந்திஜி சாலையைச் சேர்ந்த பூபதி (37) என்பது தெரியவந்தது.
சஞ்சீவ்காந்தி அளித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூபதியைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை குறிச்சியில் ரோந்து பணியில் இருந்த காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 37 வயது நபரை சுந்தராபுரம் போலீசார் கைது செய்தனர்.


