கோவை : கோவை வாலாங்குளம் ஏரிக்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் டயருக்கு கீழே கூர்மையான ஆணி இருந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இளம் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
வாலாங்குளம் ஏரிக்கரை பகுதி தினமும் மாலை நேரங்களில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிகளவில் வந்து செல்லும் இடமாக உள்ளது. இந்த நிலையில், அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பி வந்த இளம் பெண், பைக் டயருக்கு கீழே ஆணி இருப்பதை கவனித்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த ஆணியை வீடியோவாக பதிவு செய்த அவர், வாலாங்குளம் பகுதியில் வாகனங்களை நிறுத்தும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வாகனத்தின் டயருக்கு கீழே ஆணி இருப்பதை கவனிக்காமல் பைக்கை இயக்கினால் டயர் பஞ்சராகி விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை எடுப்பதற்கு முன்பு டயர்களை ஒருமுறை சோதித்துக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
தனது வீடியோவில் வாலாங்குளம் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில நபர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அந்த பெண் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், வாலாங்குளம் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





