கோவை: கோவை ஆனைக்கட்டி மற்றும் பாலைமலை பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுடன் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.
நிகழ்ச்சியில், பழங்குடியின மக்களின் பாரம்பரியக் கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றைக் கண்டு ரசித்த கனிமொழி சந்தோஷ், மக்களுடன் கலந்துரையாடி தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஆனைக்கட்டி பகுதி மக்களைச் சந்திக்க வருவதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். இங்குள்ள மக்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதே எனது முதல் பணி” என்றார்.
மேலும், கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பான மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
மக்களின் தேவைகளை நேரில் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து கொடுப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன் என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.





