கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீரான முறையில், குடிநீர் விநியோகம் செய்வதை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீர் விநியோகப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான குடிநீர் தேவையை தடையின்றி நிறைவேற்றும் வகையில் குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகள் மற்றும் குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண்.33க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் ஜெகவர் நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பினை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குடிநீர் குழாய் உடைப்பினை சீரமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.16க்கு உட்பட்ட இடையார்பாளையம் அப்பாஸ் கார்டன் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், கவுண்டம்பாளையம் வித்யா நகர் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தொட்டியினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மேற்கண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் முறை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, குடிநீர் சீரான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் நர்மதா, செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி பொறியாளர்கள் பாபு, ராஜேஸ் வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி உட்பட பலர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


