கோவை: என்டிசி ஆலைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை வேண்டுமென மத்திய அரசுக்கு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மூடப்பட்டுள்ள என்டிசி பஞ்சாலைகளை மீண்டும் இயக்கவோ அல்லது தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்கவோ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொமுச மாநிலப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி வலியுறுத்தினார்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொமுச அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், கடந்த 1974-ஆம் ஆண்டு நாடு முழுவதும் மூடப்பட்ட 128 தனியார் பஞ்சாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தி, தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) கீழ் கொண்டு வந்தது. இதன் மூலம் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்றனர்.
உதாரணமாக, கோவையில் உள்ள ரங்கவிலாஸ் ஆலைக்கு 1975-இல் ரூ.18 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனால், இன்று அந்த ஆலையின் சொத்து மதிப்பு ரூ.4,000 கோடிக்கும் அதிகமாகவும், நாடு முழுவதும் உள்ள என்டிசி ஆலைகளின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகவும் உள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்தின் போது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட என்டிசி ஆலைகள், 7 ஆண்டுகளாகியும் இன்றுவரை மீண்டும் இயக்கப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்கு போனஸ், ஆண்டு ஊதிய உயர்வு, ஓய்வுபெற்றவர்களுக்கான பணிக்கொடை உள்ளிட்ட சட்டப்பூர்வ பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
மேலும், ஆலையில் பணியாற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சுமார் 40 ஆலைகள் மூடப்பட்டாலும், 5,000 தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் (விஆர்எஸ்) வழங்கப்பட்டது.
ஆனால், தற்போதைய மத்திய அரசு ஆலைகளை இயக்கவும் மறுக்கிறது; விஆர்எஸ் வழங்கவும் மறுக்கிறது. நாடு முழுவதும் 12 ஆயிரமாக இருந்த என்டிசி தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஓய்வுக்குப் பிறகு தற்போது 7 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இவர்களுக்கு மாதம் சுமார் ரூ.40 கோடி ஊதியமாக வழங்க வேண்டிய நிலையில், கோவையில் உள்ள ஆலைகளுக்கு மட்டும் மாதம் ரூ.5 கோடி தேவைப்படுகிறது. இது தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி கோவையைச் சேர்ந்த இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தோம்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் என்டிசி தொழிலாளர்களின் போனஸ் முன்பணத் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபட்டவர் அவர். அவர் பரிந்துரைத்ததன் அடிப்படையில், ஜவுளித் துறை செயலரிடமிருந்து எங்களுக்கு பதில் கடிதம் வந்துள்ளது.
அதில், ஆலைகளை இயக்கவோ, விஆர்எஸ் வழங்கவோ இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஜவுளித் துறை செயலரோ, தலைவரோ தொழிற்சங்கங்களை அழைத்து ஒருமுறை கூடப் பேசவில்லை. ஆலைகள் இயங்காததால் பழைய இயந்திரங்கள் துருப்பிடித்து பயனற்றதாகி வருகின்றன.
பல ஆலைகளில் அதிகாரிகளே இயந்திரங்களைத் திருடி விற்கும் அவலமும் நிகழ்கிறது. அவிநாசி சாலையில் உள்ள ரங்கவிலாஸ் ஆலையில் உள்ள சுமார் 100 தென்னை மரங்களில் இருந்து மாதம் 1,000 தேங்காய்கள் வீதம், ஆண்டுக்கு 12,000 தேங்காய்கள் கிடைக்கின்றன. 7 ஆண்டுகளாக அவற்றைக்கூடப் பராமரிக்கவோ, விற்கவோ நிர்வாகம் முன்வராமல் அதிகாரிகள் முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், 100 ஆண்டுகளுக்கும் மேலான தொழிலாளர் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அவற்றைக் காலி செய்ய நோட்டீஸ் வழங்கிய நிர்வாகம், எந்தப் பராமரிப்புப் பணியையும் செய்யாமல் மாதந்தோறும் வாடகையை மட்டும் பிடித்தம் செய்து வருகிறது.
அன்றாடப் பராமரிப்புப் பணிகளுக்குக்கூட டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தின் அனுமதியைப் பெற வேண்டிய நிர்வாகக் குளறுபடியால் ஆலைகள் நஷ்டமடைகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் இந்த ஆலைகளை நடத்த முடியவில்லை என்றால், பழைய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்; அல்லது தொழிற்சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தால் நாங்களே ஏற்று நடத்தத் தயாராக உள்ளோம். பல்வேறு எம்.பி.க்கள் மூலமாகவும், கடந்த வாரம் ஜவுளித் துறை அமைச்சருக்கு விரிவான கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை.
எனவே, பிரதமர் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து, வரும் டிசம்பர் 23-ஆம் தேதி ‘வீடு திரும்பா போராட்டம்’ மற்றும் ஆலைகளை நாங்களே ஏற்று நடத்தும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.


