கோவை: சின்னியம்பாளையத்தில் உள்ள பழைய இரும்பு குடோனில் புகுந்த நபர் காப்பர் கம்பிகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர திருட்டின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
கோவை சின்னியம்பாளையம் – இருகூர் சாலையில் செயல்பட்டு வரும் பழைய இரும்பு குடோனில், பூட்டப்பட்ட கேட்டின் அடிப்பகுதி வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர், சுமார் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் இருகூர் சாலையில் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார். நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர், கேட்டின் அடிப்பகுதியில் இருந்த சிறிய இடைவெளி வழியாக உள்ளே நுழைந்தார்.
பின்னர், குடோனில் இருந்த சுமார் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை தேடி எடுத்து சாக்கு மூட்டையில் கட்டிய அவர், பின்னர் கேட்டை திறந்து வெளியே வந்து வெளியே காத்திருந்த கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து குடோன் உரிமையாளர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் கண்டு பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சின்னியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார தொழில் நிறுவனங்கள், குடோன்கள், வியாபாரிகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.





