கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் விவேகானந்தா ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில், RMV கோப்பை 2026 மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துவக்கி வைத்து, போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீனிவாசன், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா செயலர் சுவாமி ரிஷ்டானந்த மகாராஜ், வட்டாட்சியர் (வடக்கு) மாற்றுத்திறனாளிகள் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட வசந்தராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதுடன், அவர்களின் விளையாட்டுத் திறன், தன்னம்பிக்கை மற்றும் போட்டி உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் பார்வையற்றோருக்கான கையுந்துப்பந்து (Volleyball for Visually Impaired) அமர்வு கையுந்துப்பந்து (Para Sitting Volleyball), காது கேளாதோருக்கான கபடி (Kabaddi for Hearing Impaired), மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஐவர் கால்பந்து (5-A-Side Football for Intellectually Challenged) ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.




