கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கணவர் உயிரிழந்த துக்கம் தாளாமல், அடுத்த நாளே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சன் (81). இவரது மனைவி கருப்பாத்தாள் (71). இருவரும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில், அவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சன் – கருப்பாத்தாள் தம்பதியின் மகளும், பேரனும் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து, தங்களது பேத்தியுடன் இருவரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நஞ்சன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கணவரின் மறைவால் கருப்பாத்தாள் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. உறவினர்களிடம், கணவர் தன்னை தனியாக விட்டுச் சென்றுவிட்டதாகக் கூறி புலம்பி வந்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே, நேற்று காலை கருப்பாத்தாளும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால், தம்பதியின் பேத்தி தற்போது தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கணவர் உயிரிழந்த மறுநாளே மனைவியும் உயிரிழந்த சம்பவம் தேக்கம்பட்டி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நஞ்சன் – கருப்பாத்தாள் தம்பதி, இறப்பிலும் இணை பிரியாமல் சென்றது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





