கோவை: பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கதவை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளையடித்த திருடர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (38). இவரது பெற்றோர் கல்வீரம்பாளையம், எஸ்.பி.கே. நகரில் வசித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 11-ம் தேதி, பாக்கியலட்சுமியின் பெற்றோர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். இதனால் வீட்டைப் பராமரிப்பதற்காகப் பாக்கியலட்சுமி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 28-ம் தேதி மதியம் வீட்டிற்குச் சென்று சுத்தம் செய்துவிட்டு வந்த பாக்கியலட்சுமி, மீண்டும் ஜூலை 30-ம் தேதி காலை சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க கம்மல்கள், வளையல்கள், மூக்குத்தி, தங்கக் காசு என 7 பவுன் நகைகள் மற்றும் வெள்ளித் தண்டை, கொடி, விளக்குகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாக்கியலட்சுமி வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்து சேகரித்தனர். இதையடுத்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




