கோவை: அதிமுகவை நிர்வகிப்பது எடப்பாடி பழனிச்சாமியின் மகன் தான் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுத்ததில்லை என்று குறிப்பிட்டார். தேர்தல் வரும்போது அவதூறுகளையும், ஆபாசங்களையும், பெண்களை மையப்படுத்திய ஆபாசமான பிரச்சாரங்களையும் உருவாக்குகிறார்கள் என்று தெரிவித்தார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தபோதும் திமுகவினர் இதுபோன்றுதான் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாகவும், அவர் இருந்தபோது எந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது கிடையாது என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று ஜெயலலிதா அம்மையாரையும் கடுமையான வார்த்தைகளால், தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பிட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள் என்றும், சட்டப்பேரவையிலேயே ஒரு பெண் என்றும் பாராமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் பெண்களை நோக்கிய, தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கிய பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருவதாகவும் விமர்சித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியை கூறி அவர்கள் ஓட்டு கேட்டது கிடையாது என்றும், அப்படி ஓட்டு கேட்டும் இந்த முறை அவர்களுடைய கூட்டணியையும் பண பலத்தையும் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற ஆபாசமான பேச்சுக்களை மக்களும், குறிப்பாக கொங்கு மண்டல மகளிரும் தூக்கி எறிவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதில் ஒரு வருத்தமான செயல் என்னவென்றால், பழனிசாமியும் முதலமைச்சர் விஜய் குறித்து தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்தி திமுகவுடன் இணைந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்தார்.
இன்று உள்ள அதிமுக, புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட அதிமுக கிடையாது என்றும் விமர்சித்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்த அமைச்சர்கள் அனைவரும் தற்போது அதிமுகவிலிருந்து வெளியேறி விட்டதாகவும், ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் விலகியுள்ளதாகவும் கூறினார்.
ஜெயலலிதா அம்மையார் இருந்தபோது 50 தொகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்றும், கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்கும் என்றும், திமுக இங்கு வெற்றி பெறுவதே கடினமாக இருந்தது என்றும் கூறிய அவர், தற்போது அவ்வாறு இல்லை என்று விமர்சித்தார்.
இங்குள்ள தொழில்துறையினர் அமைதியான ஆட்சி வேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் இருந்தபோது நினைத்ததாகவும், திமுக வந்தால் நிம்மதியாக தொழில் செய்ய விட மாட்டார்கள் என்ற நிலை இருந்ததாகவும் கூறினார்.
ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 50 தொகுதிகளில் வெறும் 15 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். அதேசமயம் பாமக இல்லை என்றால் தற்போது வெற்றி பெற்ற தொகுதிகளைக்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் கூறினார்.
பாமக இல்லை என்றால் எடப்பாடி தொகுதியைக்கூட ஜெயித்திருக்க முடியாது என்று தெரிவித்தார். எடப்பாடி தொகுதியில் தங்களுடைய வேட்பாளரை விலை கொடுத்து வாங்காமல் இருந்திருந்தாலும், அவரை எங்கோ கொண்டு சென்று அடைத்து வைத்துவிட்டார்கள் என்றும், பின்னர் தங்களுடைய வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் சேர்ந்தார் என்றும் கூறினார்.
அப்படி இருக்கும்போது, தங்களுடைய வேட்பாளரை யார் விலை கொடுத்து வாங்கியது, எந்தக் காசு கொடுத்து மீண்டும் அதிமுகவில் சேர்த்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் மட்டும்தான் இருக்கிறார்கள் என்றும், மிதுன் அதிமுகவை வழிநடத்துவதால்தான் அங்கு இருக்கக்கூடிய முக்கியமானவர்கள் அனைவரும் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 25 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றதாகவும், அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று வெறும் 15 தொகுதிகளை மட்டுமே கொங்கு மண்டலத்தில் பெற்றதாகவும் தெரிவித்தார். மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டார்கள் என்றும் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம் இல்லை என்றால் திமுக கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றிருக்கும் என்றும், அப்படி வெற்றி பெற்றிருந்தால் இங்கு இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் தொழில் செய்திருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். ஊழல் செய்து, மிரட்டி இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவும் திமுகவும் சேர்ந்து தான் களத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், தங்களுடைய தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது மிதுன் அதிமுக என்பது உடைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து திமுக பிரச்சாரம் செய்ததாகவும், அதே பிரச்சாரத்தைத்தான் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்ற இழிவான பிரச்சாரத்தை தமிழக மக்களும், கொங்கு மண்டல மக்களும் தூக்கி எறிவார்கள் என்றும், திமுகவின் பிரச்சாரத்தைத்தான் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறினார். திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்தார்.
மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக அதிமுகவிற்கு வாக்கு கேட்பதாகவும், அதிமுக திமுகவிற்கு வாக்கு கேட்பதாகவும் விமர்சித்த அவர், மிதுனுக்கு இந்தக் கட்சியை அடமானம் தர வேண்டும் என்பதற்காக இவ்வாறு செயல்படுவதாக சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதா அவர்களின் சொத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி அவரது மகன் மிதுனைக் கொண்டு வருவதற்காக உதயநிதியுடன் திமுக, அதிமுக சேர்ந்தது என்று தெரிவித்தார்.
கொங்கு மண்டலத்தின் முகமாக தாங்கள் இருப்போம் என்றும், கொங்கு மண்டலமும் சென்னை மண்டலமும் தான் தமிழக வெற்றிக் கழகத்தை முதலில் அரவணைத்தது என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சரின் பிரச்சாரமும் சுற்றுப்பயணமும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும், கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய தொழில்துறையினருக்கு மிகப்பெரிய திட்டங்களை வகுப்போம் என்றும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
அதிமுக 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஏன் ஒதுக்கப்பட்டனர் என்றும், அதிமுகவை மறைமுகமாக வழிநடத்துபவர் யார் என்றும் கேள்வி எழுப்பினார்.
மிதுன் தான் வேட்பாளர்களை நேர்காணல் செய்தார் என்றும், அவர்தான் பிரச்சாரத்தை உருவாக்கினார் என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்குவதற்கு கட்சியில் உள்ளவர்கள் கடுமையாக உழைத்தார்கள் என்றும், ஆனால் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆன பிறகு முக்கியமானவர்களை எல்லாம் அவர் நீக்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை செங்கோட்டையனின் இல்லத்தில் இருந்துதான் தொடங்கியது என்று குறிப்பிட்ட அவர், ஆனால் அவரையே கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆனால், செங்கோட்டையனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தங்களுடைய முதலமைச்சர் புரிந்துகொண்டு, தொகுதிகளில் காசு கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
தொழில்துறையினர் சுதந்திரமாக தற்போது தொழில் நடத்தி வருவதாகவும், அவர்கள் எங்கும் மிரட்டப்படுவதில்லை என்றும் கூறிய அவர், இதுதான் மாற்றம் என்றும் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளதால் அவர்கள் தங்களுக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்றும், அவர்களுடைய வேட்பாளருக்கும் தங்களுடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.
விஜயகாந்த் என்ன பேசியிருக்கிறார் என்பதை பிரேமலதா விஜயகாந்துக்கு நாங்கள் மீண்டும் எடுத்துக்காட்டுகிறோம் என்றும், எந்தக் கட்சி விஜயகாந்தை தூக்கி எறிந்ததோ, அந்தக் கட்சியுடனேயே பிரேமலதா விஜயகாந்த் இணைந்துள்ளார் என்றும் தெரிவித்தார். இதனை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது என்றும் கூறினார்.
விஜயகாந்த் திமுகவிற்கு எதிராக என்ன பேசினாரோ, அவருடைய வழியில் மீண்டும் அதனை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.
பொதுக்கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது, QR Code ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.





