கோவை: கோவையில் 2,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சியில் கிரிக்கெட் விளையாடும் விநாயகர் பொம்மைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவிலில், 10-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு 2,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட கண்காட்சி பக்தர்கள் மற்றும் பொதுமக்களைக் கவர்ந்து வருகிறது. இதில், கிரிக்கெட் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் பொம்மைகள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 10-ஆம் ஆண்டு நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளை முன்னிட்டு, குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமான கொலு பொம்மைகள் கண்காட்சியும் நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் 2,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் பல்வேறு தலைப்புகளில் அழகுறக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நவக்கிரகத் தலங்கள், திருமண விருந்து, விவசாயம், செழிப்பான கிராமங்கள், ஜல்லிக்கட்டு, கரகாட்டம், கிருஷ்ண லீலை, ஐயப்பன் மலை, திருக்கைலாயம், திருமலை வெங்கடேசப் பெருமாள் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்திர சபையில் கிரிக்கெட் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் பொம்மைகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. பாரம்பரிய ஆன்மிகக் காட்சிகளுக்கு மத்தியில் கிரிக்கெட் விளையாட்டுடன் விநாயகர் பொம்மைகள் இடம்பெற்றிருப்பது கண்காட்சியின் தனித்துவமான அம்சமாக அமைந்துள்ளது.
மேலும், கும்பகோணம் மரப்பாச்சி பொம்மைகள், சித்தர்கள், திருக்கோவில் பூஜைகள், திருவிளக்கு பூஜை, ஆஞ்சநேயர் உற்சவம், சஞ்சீவி மலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் கண்காட்சிக்கு அழகு சேர்க்கின்றன. ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி, வள்ளியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்குத் தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
ஆன்மிகம், பாரம்பரியம், கலை மற்றும் புதுமை ஆகியவற்றை ஒருங்கே வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தக் கொலு கண்காட்சி, கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரே இடத்தில் 2,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், பக்தர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.






