கோவை: சாடிவயல் யானைகள் முகாம் சென்று பார்வையிட பொதுமக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கோவை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வந்து செல்கின்றனர்.
இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவே அமைந்துள்ள கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாத் தலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவை குற்றாலம்

அடர்ந்த வனப்பகுதி என்பதால், இங்கு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து வனத்துறை வாகனங்கள் மூலமாக மட்டுமே பொதுமக்கள் இங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இயற்கை எழில் கொஞ்சும் அருவியில் குளித்து மகிழ்வது சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது. இந்நிலையில், கோவை குற்றாலம் செல்பவர்களுக்கு மேலும் ஓர் இன்ப அதிர்ச்சியை வனத்துறை வழங்கியுள்ளது.
பொதுவாக, கோவை குற்றாலத்திற்குச் செல்வதற்கு வாரந்தோறும் திங்கட்கிழமையைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வனத்துறை அனுமதி வழங்குகிறது.
மழை அதிகரித்து அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் மட்டும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படும்.
தற்போது நீர்வரத்து சீராக இருப்பதால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை குற்றாலம் செல்பவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
சாடிவயல் யானைகள் முகாம்

போளுவாம்பட்டி வனச்சரகத்தில், கோவை குற்றாலம் செல்லும் பாதையில் சாடிவயல் யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை இந்த முகாமிற்கு அதிகாரிகளைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், இனி இந்த முகாமிற்குச் சென்று யானைகளை நேரில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பார்வைக்காக இந்த முகாம் நேற்று திறக்கப்பட்டது. வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகாம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வருகை தந்த பொதுமக்கள் யானைகளை நேரில் கண்டு மகிழ்ந்தனர். யானைகளுக்கு உணவு வழங்குவதையும், அவற்றின் செயல்பாடுகளையும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். யானைகளை அருகில் இருந்து பார்ப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்சாகமான அனுபவமாக அமைந்தது.
வன உயிரினங்களின் முக்கியத்துவம், யானைகளின் வாழ்வியல் மற்றும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் செயல்பட உள்ளது.
யானைகள் முகாம் வீடியோ
இந்த முகத்தைப் பொதுமக்கள் தினமும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் வனத்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன உயிரினங்களை நேரில் கண்டு ரசிப்பதுடன், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்த்தும் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.






