மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டின் கழிவுநீர் குழாயில் சிக்கி உயிருக்கு போராடிய சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரின் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு, அண்ணா மார்க்கெட் அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் குழாயில் பாம்பு சிக்கியிருப்பதாக வனச்சரகர் சசிகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் என்.டபுள்யூ.சி.டி. நிறுவனர் ஒயிட் பாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஆய்வு செய்தபோது, வீட்டின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் குழாயில் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கி வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாம்பை காயமின்றி மீட்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு கழிவுநீர் குழாயில் சிக்கியிருந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
தொடர்ந்து மலைப்பாம்புக்கு தேவையான முதலுதவி அளிக்கப்பட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.





