கோவை: இரண்டு மாதங்களாக ஊதியம் வராததால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தமிழ்நாடு உரிமை திட்ட பணியாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமை திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்கள், கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்று திரண்டு மனு அளித்தனர்.
சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இயன்முறை சிகிச்சையாளர்களாகவும் இதில் உள்ளதாக தெரிவித்தனர்.
தங்களுக்கு 2028 ஆம் ஆண்டு வரை பணி முடிவடையும் தேதி உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்களுக்கான ஊதியம் வழங்கப்படாததால் குடும்பச் செலவுகளை மேற்கொள்வதிலும், வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விச் செலவு, வங்கிக் கடன் தவணைகள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
ஊதியம் தாமதமாக வழங்கப்படுவது பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதுடன், பணியிலும் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டனர். எனவே, நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் மாதந்தோறும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேசமயம் இங்குள்ள இத்துறை சார்ந்த அலுவலர் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.





