கோவை: ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தைகளில் கடந்த 15 ஆண்டுகளில் நிலவிய வெண்டைக்காய் விலைகளை ஆய்வு செய்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்த ஆண்டுக்கான பண்ணை விலை கணிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தகவல்படி, நாடு முழுவதும் 5.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு சுமார் 77 லட்சம் டன் வெண்டைக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் வெண்டைக்காய்க்கு கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.37 வரை விலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் வெண்டைக்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.
தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகியவை வெண்டைக்காய் சாகுபடி செய்யப்படும் முக்கிய மாவட்டங்களாகும். இந்தப் பயிர் முக்கியமாக ஆடிப்பட்டம் (ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) மற்றும் தைப்பட்டம் (பிப்ரவரி) ஆகிய இரு பருவங்களில் பயிரிடப்படுகிறது.
Also Read: ரேஷன் கார்டில் பயோ மெட்ரிக்; கோவையில் சிறப்பு முகாம்… நீங்க பண்ணிட்டீங்களா?
தற்போது ஒட்டன்சத்திரம், கோவை மற்றும் ஓசூர் போன்ற உற்பத்தி மையங்களிலிருந்து வரும் புதிய வெண்டைக்காய், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய மொத்த விற்பனைச் சந்தைகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அடர் பச்சை நிறம் மற்றும் பளபளப்பான தோற்றம் கொண்ட வெண்டைக்காய் வகைகளை நுகர்வோர் அதிகம் விரும்புவதாக வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு, ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தைகளில் கடந்த 15 ஆண்டுகளில் நிலவிய வெண்டைக்காய் விலைகளை ஆய்வு செய்தது.
மேலும், வர்த்தகர்களிடம் விரிவான கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், அறுவடை காலத்தில் தரமான வெண்டைக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.37 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோவை செய்திகளை அறிந்து கொள்ளவும், விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் காய்கறி விலை நிலவரங்களை அறிந்து கொள்ளவும் நமது வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் வாசாகர்களே…





