கோவை: கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் 2.50 லட்சம் பேர் பயோ மெட்ரிக் பதிவு செய்யாத நிலையில், 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 11.50 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் உள்ளன. 1,453 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் யாராவது உயிரிழந்தாலும், அவர்களின் பெயர் கார்டில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பயோ மெட்ரிக் பதிவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மொத்த குடும்ப உறுப்பினர்களில் 96 சதவீதம் பேரிடம் பயோ மெட்ரிக் பதிவு பெறப்பட்டுள்ளது. விடுபட்டவர்களை கண்டறிந்து பதிவு செய்யும் வகையில், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கைரேகை மற்றும் கருவிழி ரேகை பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது வரை 2.50 லட்சம் பேர் பயோமெட்ரிக் பதிவு செய்யாமல் உள்ளனர். இதனால், பொதுமக்கள் பதிவு செய்ய வசதியாக இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
Also Read: கிணத்துக்கடவு கொடூரம்: இருவர் கைது; ஒருவருக்கு கை முறிவு!
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,
“கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பேர் தங்களது கைரேகை அல்லது கருவிழி ரேகையை பதிவு செய்யாமல் இருந்தனர். மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, ரேஷன் கார்டு உறுப்பினர்களிடமிருந்து பயோமெட்ரிக் பதிவு பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் தங்களது கைரேகையை பதிவு செய்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் மட்டும் 14 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இன்னும் பதிவு செய்யாதவர்களுக்காக இன்றும், நாளையும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது” என்றார்.
Also Read: வெண்டைக்காய் விலை எப்படி இருக்கும்? விவசாயிகளுக்கு TNAU முக்கிய கணிப்பு





