கோவை: சூலூர் கலங்கள் கிராமம் தென்றல் நகரில் தொடரும் மின்தடையால் ஆத்திரம் மக்கள் மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கலங்கள் கிராமம், தென்றல் நகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தென்றல் நகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகவே இரவு வேளைகளில் எவ்வித முன்னறிவிப்புமின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொசுத் தொல்லை, கடும் புழுக்கம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அப்பகுதி மக்கள் சந்தித்து வந்துள்ளனர். மேலும் குறைந்த வோல்டேஜ் மின்சாரம் வந்துள்ளதாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கும், அலுவலகத்திற்கும் தொலைபேசி மூலமாகவும் நேரில் சென்றும் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், அதிகாரிகள் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உரிய தீர்வு காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டனர். அப்போது அங்கு வந்த மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். மேலும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.





