கோவை : கோவை சௌபாக்கியா நகரில் டெங்கு தடுப்பு பணிகளை அமைச்சர் அருண்ராஜ், எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் ஆய்வு செய்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்ரா பகுதி, வார்டு எண் 23-ல் உள்ள சௌபாக்கியா நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள், கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உடனிருந்தார்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், தேவையற்ற பொருட்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்குவதைத் தவிர்த்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார நிலையத்தை அணுகி உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
டெங்கு தடுப்பில் அரசின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு டெங்கு பாதிப்பைத் தடுப்போம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.





