கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் வேளாண் இணை பேராசிரியர்களுக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியைத் துவக்கி வைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் சுப்ரமணியன், கல்விசார் மேன்மை என்பது கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீடுகள் அல்லது செயல் திறன் குறியீடுகளால் மட்டும் அளவிடப்படுவதில்லை. தொடர்ந்து கற்றல், பல்துறை ஒருங்கிணைப்பு மற்றும் வேளாண் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில்தான் கல்விசார் மேன்மை வெளிப்படுகிறது என்றும், அது சமூக முன்னேற்றத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது என்றார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர் (DABD) முனைவர் சோமசுந்தரம் சிறப்புரையில், 21-ம் நூற்றாண்டின் கல்வி மரபுவழி வகுப்பறைக் கற்பித்தல் மற்றும் தேர்வு மையக் கற்றலைத் தாண்டி இருக்க வேண்டும். மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை நிலையான தொழில் முயற்சிகளாக மாற்றுவதற்குத் தேவையான அறிவு, திறன், தன்னம்பிக்கை மற்றும் நடைமுறை அனுபவங்களை வழங்கி, தொழில்முனைவு மனப்பான்மையை வளர்ப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு பேராசிரியர்களுக்குத் தொடர்ந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது அவசியம் என்றார்.
வாழ்த்துரையாற்றிய திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குநர் முனைவர் ஜெயக்குமார் மாணவர்களை ஊக்குவிப்பதிலும், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பக் கற்பித்தலை ஒருங்கிணைப்பதிலும், ஆராய்ச்சி சார்ந்த கற்றலை ஊக்குவிப்பதிலும், புதுமை மற்றும் தொழில்முனைவை வளர்க்கும் கல்விச் சூழலை உருவாக்குவதிலும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்றார்.
இதனைக் கருத்தில் கொண்டு, நவீன கற்பித்தல் அணுகுமுறைகள், மேம்பட்ட ஆராய்ச்சித்திறன்கள், டிஜிட்டல் கற்பித்தல், இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அறிவியல் தகவல் தொடர்புத் திறன்களை பேராசிரியர்களுக்கு வழங்கும் வகையில் இப்பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உயர்தர ஆராய்ச்சி முன்மொழிவுகளை உருவாக்குதல், இந்தியக் கல்வி அமைப்பைப் புரிந்துகொள்ளுதல், கல்விசார் மேன்மைக்கான தர உறுதிப்பாடு, இணையப் பாதுகாப்பு மற்றும் தரவு தனியுரிமை, Q1 தர அறிவியல் ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கான உத்திகள். செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்பித்தல் முறைகள், கல்விசார் செயலிகள், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் மற்றும் வேளாண் விரிவாக்கத்தில் நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.





