கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் விவசாய தோட்டத்திற்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், 7 மாத கன்றுக்குட்டியை இரும்பு ராடால் அடித்துக் கொன்றதுடன், 2 மாடுகளை காயப்படுத்தி கோழி, சேவல்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மோகன், கோவை-திருச்சி பிரதான சாலையில் மரப்பாலம் பகுதியில் தோட்டம் அமைத்து கால்நடைகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நள்ளிரவில் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 7 மாத கன்றுக்குட்டியை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து, அருகில் கட்டப்பட்டிருந்த மேலும் 2 மாடுகளையும் ஹாலோ பிளாக் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் அந்த மாடுகளும் காயமடைந்தன. பின்னர் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த கோழி மற்றும் சேவல்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தோட்டத்தில் இருந்து தப்பிச் செல்லும்போது மர்ம நபர்கள் தாங்கள் அணிந்திருந்த சட்டைகளை அங்கேயே கழற்றி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
மறுநாள் காலை வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்ற மோகன், கன்றுக்குட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், காயங்களுடன் நின்றுகொண்டிருந்த 2 மாடுகளையும், காணாமல் போன கோழிகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மோகன் சூலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சம்பவ இடத்தில் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சட்டைகள் உள்ளிட்ட தடயங்களை போலீஸார் சேகரித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஏதேனும் காட்சிகள் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்றுக்குட்டியை கொடூரமாக தாக்கி கொன்றுவிட்டு, மாடுகளையும் தாக்கி கோழிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க சூலூர் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






