கோவை: சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் கார்த்திக், மோகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 68 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 220 ஆவணங்கள் மற்றும் 10 சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இரண்டு எதிர்தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால், முதல் குற்றவாளியான கார்த்திக் மதுரை சிறையிலிருந்து கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரன், தீர்ப்பை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதற்காக வழக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான கார்த்திக் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இரண்டாவது குற்றவாளியான மோகனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்றார்.
மேலும், இந்த வழக்கில் 68 அரசு தரப்பு சாட்சிகளும், இரண்டு எதிர்தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டுள்ளனர். 220 ஆவணங்கள் மற்றும் 10 சான்றுப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மூன்று வாரங்களில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்குள் நீதிமன்ற விசாரணையும் நிறைவு செய்யப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கும் நிலையை வழக்கு எட்டியுள்ளது.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. மேலும், கூடுதல் ஆவணங்கள் அல்லது சாட்சியங்களைத் தாக்கல் செய்ய இனி வாய்ப்பில்லை. அரசு தரப்பில் இந்த வழக்கின் புலன் விசாரணை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் சிறப்புக் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்பட்டன.
சாதனை நேரத்தில் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் புலன் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு இது எனத் தெரிவித்தார்.





