கோவை: கோவையில் நகை பட்டறை உரிமையாளர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டின் முதல் மாடியில் செயல்பட்டு வந்த நகை பட்டறையின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சபாபதி (65). இவர் தனது வீட்டின் முதல் மாடியில் நகை பட்டறை அமைத்து, நகை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி சபாபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் முதல் மாடியில் உள்ள நகை பட்டறைக்குச் சென்றபோது, அதன் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பட்டறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த 15 கிராம் தங்கம் மற்றும் 75 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
சபாபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நகை பட்டறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சபாபதி செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும், திருட்டு நடைபெற்ற விதம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் முதல் மாடியில் செயல்பட்டு வந்த நகை பட்டறையின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் செல்வபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





