கோவையில் ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய மறுபயன்பாட்டு மையம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 26-க்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தனர்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 26-க்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் கட்டாரவு தேஜா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள், மருத்துவமனைக்கு நாள்தோறும் வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் யோகா பயிற்சி உள்ளிட்ட சேவைகளையும் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பீளமேடு பகுதியில் உள்ள சமுதாய மறுபயன்பாட்டு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், அங்கு சேகரிக்கப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் அவற்றைத் தரம் பிரித்து மறுபயன்பாட்டுக்கு அனுப்பும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும், சரவணம்பட்டி பகுதியில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந்த ஆய்வின்போது வடக்கு மண்டலத் தலைவர் கதிர்வேல், மாநகர நல அலுவலர், உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.





