கோவை: கோவை சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேல்முருகன் தனியார் பேருந்து எதிர்திசையில் சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ளகோவில் – கோவை வழித்தடத்தில் வேல்முருகன் என்ற தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து (TN 42 AZ 0747), சூலூர் விமானப்படை கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி எதிர்திசையில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
சாலையில் வழக்கமான பாதையில் செல்ல இடமிருந்தும், எதிரே வரும் வாகனங்கள் செல்லும் பாதையில் பேருந்து சென்றதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும், பேருந்து தொடர்ந்து அதிக ஒலியுடன் ஹாரன் அடித்தபடி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், எதிரே வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உருவானதாகப் புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, பள்ளி அருகே இதுபோன்ற சம்பவம் நடந்ததாகக் கூறப்படுவது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
VIDEO
தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், வைரலாகி வரும் வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பேருந்து எதிர்திசையில் சென்றதா என்பது குறித்து போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.






