கோவை: கோவையில் 150 பெண் குழந்தைகளுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கினார் வானதி சீனிவாசன்.
கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத்தி சமாஜ் மண்டபத்தில், மக்கள் சேவை மையம் சார்பில் தாயின் அரவணைப்பில் வளரும் பெண் குழந்தைகளுக்குத் தீபாவளிப் பரிசுகள் வழங்கப்பட்டன. மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் பரிசுகளை வழங்கினார்.
ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 150 பெண் குழந்தைகளுக்குப் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், 2020-ஆம் ஆண்டு மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தாயின் அரவணைப்பில் வளரும் பெண் குழந்தைகளுக்குத் தீபாவளிப் பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இந்த ஆண்டு 150 பெண் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி, அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சரியான திட்டமிடல் அரசிடம் இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர், மின் தேவையைச் சமாளிக்க அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதாகக் கூறினார். பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், கோவில்களில் துணை குடியரசுத் தலைவர் வருகையின்போதுகூட மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இதுபோன்ற சூழலில், மின்சாரத் துறை அமைச்சர் அதிகாரிகளைக் குறைகூறுவது, துறையின் செயல்பாடுகள் அவர் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகக் கூறினார்.
தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியைப் பெற்று மின்வெட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிப்பதுடன், சிறு தொழில்கள் அதிகம் நிறைந்த கோவை மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். ஏற்கெனவே ஜிஎஸ்டி வருவாய் குறைவது வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சிறை மற்றும் காவல் துறைப் பாதுகாப்பிலிருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்புவதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவையில் காவல் கட்டுப்பாட்டில் இருந்த ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், கைதிகளுக்குக்கூட காவல் துறையினர் மீது பயமோ மரியாதையோ இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது என்றார்.
புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், தூய சக்தி எனவும் கூறும் அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உடனடியாகப் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்; இல்லையெனில் மக்களிடம் அரசின் செயல்பாடுகள் வெளிப்பட்டுவிடும் என்றும் எச்சரித்தார்.
அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழலில், முதலமைச்சர் விஜய் அங்கு குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்குத் தலைவர்கள் செல்வது வழக்கமான ஒன்றுதான் என்றார். குறிப்பிட்ட தொகுதியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு குறித்துப் பேசும்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா, இடைத்தரகர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை ஆய்வு செய்து, கள்ளச்சந்தை விற்பனைக்கு இடமளிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும் விவகாரங்கள் என்றும் குறிப்பிட்டார்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவது குறித்த கேள்விக்கு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என்றார். அதேவேளையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கான விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.
சென்னையில் 60 வயது முதியவர் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் சென்றது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இதுபோன்ற சம்பவங்கள் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்புவதாகக் கூறினார். தூய சக்தி எனக் கூறப்படும் நிலையில், என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் எனச் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
நடிகர் தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த வானதி சீனிவாசன், தமிழகத்தில் பலரும் அரசியல் கட்சிகளைத் தொடங்குவதாகவும், யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என்றும் கூறினார். ஆனால், அவர்கள் மக்களின் ஆதரவை எவ்வாறு பெறுகிறார்கள், பொதுவாழ்வில் உண்மையாகச் செயல்படுகிறார்களா என்பதுதான் முக்கியம் என்றார்.
தனுஷ் அரசியலில் தீவிரமாகப் பங்காற்ற விரும்புவதை நல்ல விஷயமாகப் பார்ப்பதாகவும், விஜய் அரசியலுக்கு வந்தபோதும் இதே கருத்தைத் தெரிவித்ததாகவும் கூறினார். பொதுவாழ்வில் எவ்வளவு தூரம் மக்கள் சேவையாற்றுகிறார்கள் என்பதில்தான் ஒவ்வொருவரின் வெற்றியும் அடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
தேர்தலில் சித்தாந்தத்தின் அடிப்படையில் மட்டுமே வாக்குகள் பதிவாகின்றனவா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் மக்களின் மனநிலை, வேட்பாளரின் செயல்பாடு, ஆட்சி மாற்றத்திற்கான விருப்பம் மற்றும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன என்றார். அதேவேளையில், அரசியல் கட்சிகளுக்குச் சித்தாந்தம் மிகவும் முக்கியமானது என்றும், அது கட்சியின் செயல்பாடுகளுக்கு ஒரு தெளிவை அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக ஆட்சிக்கும் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கும் இடையே பெரிய வேறுபாட்டைக் காணவில்லை என்றார். தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், திமுக எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆறுகளில் உருவாகும் நுரை, மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவால் ஏற்படுவதாக அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அமைச்சர்கள் புதிது புதிதாகக் காரணங்களைக் கூறுவதாக விமர்சித்தார். நொய்யல் ஆற்றின் புட்டுவிக்கி பகுதியில் இன்னமும் மனிதக் கழிவுகள் கலப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு, நிர்வாக மட்டத்தில் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்றும், நிர்வாக ரீதியாக ஊழல் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
நிதி நெருக்கடி நிலவும் சூழலில் இலவசங்கள் வழங்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இலவசத் திட்டங்கள் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன என்பதை மதிப்பிட வேண்டும் என்றார். திட்டமிடல் இல்லாமல் இலவசங்கள் வழங்கப்பட்டால் பல்வேறு துறைகளில் நிதிப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வெற்றிப் பயணம் திட்டத்தால் போக்குவரத்துத் துறை நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, போக்குவரத்துத் துறை நீண்ட காலமாகவே நிதி நெருக்கடியில் இருப்பதாகத் தெரிவித்தார். இலவசப் பயணத் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தி, நிதி நெருக்கடியைச் சீரமைக்கக்கூடிய வகையில் அரசு நடவடிக்கை எடுத்தால் அதை வரவேற்பதாகக் கூறினார்.
வெற்றிப் பயணத் திட்டம் சில பெண்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், அனைவருக்கும் வழங்க வேண்டுமா என்பதை ஆராய்ந்து, உரிய அளவுகோல்களை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், வாக்காளர் பட்டியலில் தவறுகள் நடந்துள்ளதாகக் கூறுபவர்கள் அதற்கான உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றார். ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் ஆதாரங்களுடன் புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். வெளிப்படைத்தன்மையுடன் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த விவகாரத்தை அணுகினால் மக்களிடம் தவறான கருத்தை உருவாக்க நேரிடும் என்றும் கூறினார்.






