கோவை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதனை செயல்படுத்துவதற்கான நீர் ஆதார திட்டங்கள் எங்கே என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்த வேளாண் பட்ஜெட்டில் மகிழ்ச்சி இருப்பதாக விவசாயிகளுக்கு தெரியவில்லை அதற்குக் காரணம் முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறிய பயிர் கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு இல்லாதது என்று சுட்டிக்காட்டினார்.
பாண்டியாறு பொன்னம்பல ஆறு திட்டம், ஆனைமலை நல்லாறு திட்டமெல்லாம் என்று கொங்கு பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அது குறித்து அறிவிப்பு இல்லை என்றும் கூறிய அவர் விவசாயிகளிடம் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளாகவே அறைக்குள் அமர்ந்து கொண்டு அறிக்கைகள் தயார் செய்து அமைச்சரை படியுங்கள் என்று அமைச்சர் கவிதை பாடியது தான் கேட்டோம் என்று தெரிவித்தார். விவசாயிகள் தாங்கள் கூறியதை கூட கேட்கவில்லை தேர்தல் வாக்குறுதியாக கூறியதை தான் கேட்கிறோம் என்று குறிப்பிட்டார்.
தண்ணீர் இல்லாமல் எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்றும் நீரை உருவாக்குவதற்கும் அதனை பாதுகாப்பதற்கும் திட்டங்களை முதலில் வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தென்னை விவசாயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் கள் இறக்குவது அரசின் கொள்கை முடிவிலும் வருவாயிலும் உள்ளது என்றார். இருப்பினும் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் வழங்கினால் கூட தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். பட்டு வளர்ச்சி குறித்தும் திராட்சை குறித்தும் ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்று தெரிவித்தார். காட்டுப்பன்றி சேதத்திற்கு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அந்த ஏழு கோடி நிதி என்பது மிகவும் குறைவு என்று தெரிவித்தார்.
நெற்பயிர்களை பாதுகாப்பதற்கு தார்பாய்கள் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பழைய குருடி கதவ திறடி என்பது போல் தான் இருப்பதாகவும் புதிய வரையறை திட்டங்கள் எதுவும் இல்லை யார் இந்த யோசனையை கூறினார்கள் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் காவிரி குண்டாறு ஆனைமலை நல்லாறு பாண்டியாறு பொன்னம்பல ஆறு ஆகியவை குறித்து வாய் திறக்கவில்லை என்று கூறியவர் அமைச்சருக்கு தெரியவில்லை என்றால் விவசாயிகள் நாங்கள் கூறுகிறோம் எங்களை இணைத்து திட்டங்களை செயல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்
விவசாயிகளுக்கு பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தான கேள்விக்கு, விருதுகளை அள்ளித் தருவது மகிழ்ச்சி தான் ஆனால் அந்த விருதுகளை பெறுவதற்கு விவசாயிகள் உயிருடன் இருக்க வேண்டும் விளைநிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். விளை நிலங்களும் விவசாயிகளும் இல்லாமல் அந்த விருதுகளை யார் தான் வாங்குவார் என்று கேள்வி எழுப்பினார்.
மானாவாரி விவசாயத்திற்கு புளி மரத்தை நடலாம் ஆனால் தண்ணீர் வேண்டும் அல்லவா? என்றார். திட்டங்கள் எல்லாம் சரிதான் ஆனால் அதற்கான நீர் ஆதாரங்கள் எங்கே உள்ளது? வறண்ட குளங்களை நீர் ஆதாரங்களை மீட்டெடுக்க எத்தகைய திட்டங்கள் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பிய அவர் அதற்குரிய திட்டங்கள் இருந்தால்தான் அனைத்தும் சாத்தியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் என்பது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் படிப்பதற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது அதனை நடைமுறைப்படுத்தினால் வரவேற்போம் ஆனால் தற்போதைக்கு நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த பயிர் கடன் தள்ளுபடி இல்லை என்பது வருத்தத்தையும் தொல்லையையும் கொடுப்பதாக தெரிவித்தார்.





