கோவை: தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவை பள்ளி மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 69-ஆவது தேசிய பள்ளிக்கல்வி குழுமம் (SGFI)சார்பில் கராத்தே போட்டி நடைபெற்றது.
14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் தமிழக அணியின் சார்பில் கோவை சிங்கின் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகடாமி மற்றும் கீதாஞ்சலி பள்ளியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினுமித்ரா, 17 வயதுக்குட்பட்ட குமித்தே பிரிவில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
பதக்கத்துடன் கோவை திரும்பிய மாணவியை பெற்றோர்,பயிற்சியாளர்கள் விமான நிலையத்தில் மலர்மாலைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
கராத்தேவில் தேசிய அளவில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசு சார்பில் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.1.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வகை கராத்தே போட்டிகளை முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் சேர்க்க வேண்டும் என பயிற்சியாளர் கணேஷ்மூர்த்தி வலியுறுத்தினார்.

