கோவை: கேஸ் சிலிண்டர் பயனாளிகள் தடையில்லாமல் கேஸ் சிலிண்டரை பெற வேண்டுமானால், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மத்திய அரசு கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை உடனே செய்து முடிக்க வேண்டும்.
உஜ்வாலா திட்டம்
நாடு முழுவதும் விறகு அடுப்பு பயன்பாட்டை குறைத்து, அனைத்து மக்களும் கேஸ் பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தினருக்கு விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம், பயனாளிகளுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை சுமார் ரூ.928 முதல் ரூ.957 வரை விற்கப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக உள்ள போக்குவரத்து செலவுகளின் அடிப்படையில் விலையில் மாறுபாடு இருக்கும். கோவையைப் பொறுத்தவரையில் சுமார் ரூ.942க்கு விற்பனையாகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் உஜ்வாலா பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2022ம் ஆண்டில் உஜ்வாலா பயனாளர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதாவது ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை இந்த மானியம் வழங்கப்பட்டு வந்தது. இது 2023ல் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. அப்போதும், 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர், 2025 ஆகஸ்ட் மாதம் முதல் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை 9ஆக குறைக்கப்பட்டது. இது கடந்த ஜூன் மாதத்தில் 4ஆக குறைத்து அறிவிக்கப்பட்டது. பயனாளிகள் 4 சிலிண்டர்களுக்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு சிலிண்டர்களும், சாதாரண நுகர்வோர் வாங்கும் விலையிலேயே வழங்கப்படும்.
காரணம்
இந்த மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைத்ததற்கான காரணத்தையும் மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது, ஒரு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்வதற்கான அடக்கவிலை ரூ.1,600க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதே காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிலிண்டர் அடக்க விலை உயர்ந்தாலும், உஜ்வாலா பயனாளிகள் பாதிக்கப்படாமல் இருக்கவே மானியம் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
இருமடங்கு
இண்டியன் ஆயில் (Indane Gas), பாரத் பெட்ரோலியம் (Bharat Gas), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும், கோ கேஸ், கெயில், குஜராத் கேஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் விநியோகத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 33.20 கோடிக்கும் அதிகமானதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கேஸ் இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கை இருமடங்களாக அதிகரித்து வருகிறது. இந்த மொத்த இணைப்புகளில் 60 சதவீதம் வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கும், 40 சதவீதம் வணிகம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

4ம் இடம்
குறிப்பாக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில், அதிகபட்சமாக மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சுமார் 4 கோடியே 90 லட்சம் குடும்பங்கள் கேஸ் இணைப்பை பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்திற்கு அடுத்தபடியாக, தமிழகம் சுமார்2.4 கோடி கேஸ் இணைப்புகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், போலி மற்றும் தகுதியில்லாத கேஸ் சிலிண்டர் இணைப்புகளை கண்டறிந்து நீக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கேஸ் சிலிண்டர்களின் மானியத்தை பெறவும், சிலிண்டர்கள் தடையில்லாமல் கிடைக்கவும், பயனாளிகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அதாவது, இந்தப் பணிகளை வரும் 15ம் தேதிக்குள் முடித்தால் மட்டுமே, அடுத்த மாதம் முதல் கேஸ் சிலிண்டர்களை புக் செய்யவே முடியும்.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் காரணமாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. தற்போது, தட்டுப்பாடு நீங்கி, தடையில்லாமல் சிலிண்டர்கள் கிடைத்து வரும் நிலையில், பயனாளிகள் KYC செய்வது கட்டாயமாகியுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான கேஸ் இணைப்பை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், அனைவரும் வரும் 15ம் தேதிக்குள் இ-கேஒய்சி (E-KYC) செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், சிலிண்டர் மானியம் மட்டுமல்லாது, கேஸ் சிலிண்டரை புக் செய்யவே முடியாமல் போகலாம்.
அனைத்து கேஸ் வாடிக்கையாளர்களும் இந்த கேஒய்சி செய்ய வேண்டுமா? அல்லது உஜ்வாலா பயனாளிகள் மட்டும் இந்த கேஒய்சியை செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே, உங்களின் கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, கேட்டுக் கொள்வது சிறந்ததாகும்.
எப்படி செய்வது?

இன்டேன் சிலிண்டர் பயனாளிகள் IndianOil One App மூலம் வாடிக்கையாளர் எண்ணை பயன்படுத்தி, ஆப்பின் உள்ளே நுழைய வேண்டும். அப்போது, ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி (OTP), முக அடையாள சரிபார்ப்பு ஆகியவற்றை முடித்து இ-கேஒய்சியை நிறைவு செய்ய வேண்டும். அதேபோல, HP, Bharat Gas போன்ற கேஸ் சிலிண்டர் பயனாளிகளும், அந்தந்த நிறுவனங்களின் தனித்தனி செயலி மூலம், இ-கேஒய்சி செய்து முடிக்கலாம். அப்படியில்லை எனில், சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக கேஒய்சியை பண்ண வேண்டும்.
ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ள முடியாதவர்கள், சம்பந்தப்பட் கேஎஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு கேஸ் புக் மற்றும் ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு நேரில் சென்று இ-கேஒய்சி செய்து முடிக்க வேண்டும். காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், உடனே செய்து முடித்தால், சற்று நிதானத்துடன் பணிகளை செய்து முடிக்க முடியும்.




