கோவை: மத்திய அரசின் திருநங்கை திருநர் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவில் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு வழி வகையும் இல்லை என்று கோவையில் கல்கி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 12ம் தேதி கொண்டு வந்துள்ள திருநர் திருத்த மசோதாவில் திருநங்கைகள் திருநர்கள் முன்னேற்றம் அடைவதற்கான வழிவகை கிடையாது என்றும் இழிவுபடுத்தும் விதமாகவே திருத்த சட்ட மசோதா கொண்டு வந்திருப்பதாகவும் தேசிய திருநர் பேரவையின் உறுப்பினராக திருநங்கை கல்கி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்கி சுப்பிரமணியம் கூறியதாவது:-
திருநங்கை, திருநர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அடையாளத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறது.
2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த Transgender Persons (Protection of Rights) Act, 2019 சட்டம் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் கூறப்பட்ட இட ஒதுக்கீடு திருநங்கை சமூகத்தினருக்கான வீடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேலும், 2014ஆம் ஆண்டு National Legal Services Authority vs Union of India வழக்கில் Supreme Court of India வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை
திருநங்கை திருநர்கள் சமூகத்துக்கு வழங்கியது. அதில் சுய அடையாள உரிமை, கல்வி, சட்டப் பாதுகாப்பு வேலை வாய்ப்பு ஆகியவற்றை வழங்கியிருந்தது. அதில் பல்வேறு விஷயங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திரகுமார் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள சட்டத் திருத்த மசோதா, திருநங்கை சமூகத்தின் அடையாளத்தையே அழிப்பதாக உள்ளது.
புதிய மசோதா
திருநங்கை ஒருவர் தனது பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள அரசு சான்றிதழ் பெற வேண்டுமெனில் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்ற விதிமுறை, மனித மரியாதையை மீறும் செயல்.
ஆண் அல்லது பெண் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு இத்தகைய பரிசோதனை தேவையில்லை. ஆனால், திருநங்கைகளுக்கு மட்டும் இப்படியான நிபந்தனை விதிப்பது பாகுபாடு.
மேலும், திருநங்கை சமூகத்துக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, இடஒதுக்கீடு போன்ற அடிப்படை உரிமைகள் குறித்து எந்தத் தெளிவான திட்டமும் இல்லாமல், தண்டனைகளை மட்டுமே அதிகமாக கவனத்தில் கொள்ளும் விதமாக இந்தத் திருத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருநங்கை மக்களை கடத்தி கட்டாய பிச்சை எடுக்கவைத்தல் அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு மிகக் குறைந்த தண்டனை மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும், இந்த மசோதாவில் “திருநங்கை” என்ற மரியாதையான தமிழ்ச்சொல்லுக்கு பதிலாக “அரவாணி” என குறிப்பிடப்பட்டுள்ளது. திருநங்கை என்பது மத சார்பற்ற, மரியாதையான அடையாளம். அதையே அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் திருநங்கை பிரதிநிதிகள் மத்திய அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டிருந்தாலும், இந்த சட்டத் திருத்தம் குறித்து அவர்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.
இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும், குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்திலும் விரைவில் போராட்டங்கள் தீவிரமடையும். இந்த சட்டத் திருத்தம் எங்கள் சுயமரியாதையை காயப்படுத்துகிறது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

