கோவை: வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த காட்டெருமை மாயமானதால், அதனை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கெம்பனூர் சுற்றுவனப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக ஒரு காட்டெருமை சுற்றித்திரிந்து வருகிறது. அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்துள்ளது.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அட்டுக்கல் பெரும்பள்ளத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து வனத்துறையினர் காட்டெருமையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அதன் பின்னரும் அட்டுக்கல், தாளியூர் வன எல்லைப் பகுதிகளில் காட்டெருமை சுற்றித்திரிந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை அந்த காட்டெருமை தொண்டாமுத்தூர் – மாதம்பட்டி சாலையில் உள்ள மோகன் என்பவரின் பாக்கு தோட்டத்துக்குள் புகுந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டெருமையை கண்காணித்து வந்தனர்.
அப்போது காட்டெருமை அருகிலிருந்த புதருக்குள் சென்று திடீரென மாயமானது. அதன் பின்னர் அது எங்கும் தென்படவில்லை.
இது காட்டுக்குள் திரும்பிச் சென்றதா அல்லது வேறு பகுதிக்கு நகர்ந்ததா என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


