கோவை: கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்களது டெபாசிட்டை இழந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், சூலூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை என மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன.
இந்த தேர்தலில் 6 தொகுதிகளை கைப்பற்றி தமிழக வெற்றி கழகம் முன்னிலை சாதனை படைத்தது.
அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் வலுவான பகுதியாக கருதப்பட்ட கோவையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க. வால்பாறை, பொள்ளாச்சி, கோவை தெற்கு ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
வாக்கு சதவீதத்தில் தமிழக வெற்றி கழகம் 34.7 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து தி.மு.க. 31.49 சதவீதம், அ.தி.மு.க. 27.57 சதவீதம், நாம் தமிழர் கட்சி 3.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
மொத்தம் 183 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக 31 பேரும், கிணத்துகடவு தொகுதியில் குறைந்தபட்சமாக 5 பேரும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் பின்னர் தி.மு.க., த.வெ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை பெற்றுள்ளனர்.
மற்றவர்களுடன் சேர்த்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 152 பேர் டெபாசிட்டை இழந்துள்ளனர்.



