கோவை: ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள அபார்ட்மெண்டை சேர்ந்தவர் கோமதி (69). இவரது கணவர் தங்கராஜ். பத்திரப்பதிவு துறையில் பதிவாளராக பணியாற்றியவர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். கோமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவரது மகள் கடந்த 3ம் தேதி காலை லண்டனில் இருந்து தாயாரை பார்க்க கோவை வந்தார். வீட்டுக்கு சென்று பார்த்த போது, அறைக்குள் கோமதி சடலமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோமதி சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் மூதாட்டி நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. மூதாட்டி அணிந்திருந்த 2½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், மூதாட்டி வீட்டுக்கு யாரேனும் வந்து சென்றார்களா என அக்கம்பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தனர். அதில், ஒரு வாலிபர் மூதாட்டியின் துணிகளை சலவை செய்ய எடுத்து செல்ல அடிக்கடி வந்தது தெரியவந்தது.
அவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. தீவிர விசாரணையில், மூதாட்டியை கொலை செய்த கும்பகோணத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் (24) என்ற சலவை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் தனது மனைவியுடன் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் வாடகை வீட்டில் தங்கியிருந்து சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
கொள்ளை திட்டம்
கோமதியின் துணிகளை சலவை செய்து கொடுக்க அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மூதாட்டி தனியாக வசிப்பதை அறிந்த ரஞ்சித், அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டார்.
சம்பவம் நடந்த நாளில் மாலை நேரத்தில் சலவை துணி கொடுக்க கோமதி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், துணியால் கழுத்தை நெரித்து அவரை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
மேலும் அந்த நகைகளை ரூ.2 லட்சத்திற்கு விற்று மனைவியை ராமேஷ்வரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.



