கோவை: தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் திரண்டிருந்த த.வெ.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“முதல்வர் விஜய்”, “தளபதி வாழ்க” என முழக்கங்களை எழுப்பியபடி உற்சாகமாக கொண்டாடினர்.
அதேபோல், கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கனிமொழியின் தேர்தல் அலுவலகம் முன்பாக பிரம்மாண்டமான எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டிருந்தது.

அதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
திரையில் ‘தளபதி’ விஜய்யை கண்ட தொண்டர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கோவையின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


