கோவை: “முட்ட கலக்கி” பாடல் யாரும் எதிர்பாராத வகையில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வைரல் ஹிட் பாடலாக சாதனை படைத்துள்ளது.
முட்ட கலக்கி பாடல் 200 மில்லியன் பார்வைகள் சாதனை
இளம் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த “முட்ட கலக்கி” பாடல் தற்போது மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. “முட்ட கலக்கி” பாடல் அதன் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ மற்றும் சமூக வலைதள ரிலீஸ், ஷார்ட்ஸ், ஸ்ட்ரீம்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மொத்தமாக 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைரல் ஹிட் பாடலாக மாறிய “முட்ட கலக்கி”
“முட்ட கலக்கி” பாடல் வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பாடல் அதன் துள்ளலான இசை, நகைச்சுவை கலந்த வரிகள் மற்றும் கென் கருணாசின் உற்சாகமான குரலால் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமானது.
இந்தப் பாடலை ‘கென்கருணாஸ்’ எழுதி பாடியுள்ளார். இசையமைப்பாளர் ‘ஜி.வி. பிரகாஷ் குமார்’ இசையமைத்துள்ளார். 2026 பிப்ரவரி 7ஆம் தேதி வெளியான இந்த பாடல் YouTube, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஷார்ட்ஸ் மற்றும் பல்வேறு இசைத்தளங்களில் வைரலாகி, தற்போது 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இளையர்களை கவர்ந்த இசை
வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த பாடல் ஆரம்பத்தில் ஒரு முன்னணி ஆடியோ நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். “இந்த படத்தில் வைரல் பாடல்கள் இருக்காது” என்று கூறி குறைந்த விலையிலேயே முன்மொழிந்ததாகவும், அதனால் தனது சொந்த லேபிள் மூலமாகவே பாடலை வெளியிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். பின்னர் அதே பாடல் மிகப்பெரிய ஹிட்டாக மாறியதும், சில நிறுவனங்கள் பல மடங்கு அதிக தொகை கொடுத்து வாங்க முன் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ட்ரெண்டான “முட்ட கலக்கி”
பாடலின் வெற்றி காரணமாக “Youth” திரைப்படத்திற்கும் பெரிய அளவில் கவனம் கிடைத்தது. திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்று, கென் கருணாஸை நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி ஆயிரக்கணக்கான ரீல்ஸ் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் உருவாக்கப்பட்டன. Reddit உள்ளிட்ட இணைய சமூகங்களிலும் பாடல் பற்றிய பல்வேறு விவாதங்கள் நடந்தன.
200 மில்லியன் பார்வைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள “முட்ட கலக்கி” 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தமிழ் இசை வைரல் ஹிட்களில் ஒன்றாக தனது இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளது.


