பத்திரிகையாளர்களை மிரட்டுகிறேனா…? கோவையில் செங்கோட்டையில் பதில்!

கோவை: பத்திரிகையாளர்களை மிரட்டும் தோனியில் பதில் கொடுக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நான் மென்மையான சுபாவம் கொண்டவன், எதிர்க்கட்சியினர் கூட என்னை பாராட்டி இருக்கிறார்கள் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை தொடர்பாக தமிழக முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இன்று காலையில்கூட அதற்கான ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன.

தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை நமக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொள்ள மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

முதலமைச்சரின் ஆய்வின்போது, ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு, தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, தென்மேற்கு பருவமழை குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

நீலகிரி நிலச்சரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றும் வகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. என்றார்.

பத்திரப்பதிவுத் துறையில் அதிக ஊழல் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது தொடர்பான கேள்விக்கு:

அங்கு யார் ஊழல் செய்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால், உங்கள் மூலமாகவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செய்தியாளர்கள் வெறும் கேள்விகள் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தவறுகள் நடப்பதைச் சுட்டிக்காட்டினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறீர்கள். இந்த அரசு அமைந்து இன்னும் சில நாட்களே ஆகின்றன. பொதுவாக, ஒரு புதிய நிர்வாகம் தன்னிச்சையாகச் செயல்பட சில மாதங்களாவது அவகாசம் கொடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால், அதற்குள்ளாகவே கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. என்றார்.

கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை மிரட்டும் தோனியில் பதில் அளிக்கிறீர்களா என்ற கேள்விக்கு:

நாங்கள் யாரையும் மிரட்டவில்லை; அரசு பொறுப்பேற்ற இந்தச் சிறிய காலத்திற்குள்ளேயே கடுமையான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். குறிப்பாகச் சூலூர் சம்பவத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனது தோனி எப்போதும் மாறவில்லை; நான் மென்மையான சுபாவம் கொண்டவன் என்று எதிர்க்கட்சியினர் கூட எங்களைப் பாராட்டியிருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதலமைச்சர் அனைத்துப் பணிகளையும் படிப்படியாகச் செய்து வருகிறார், அதற்குரிய கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம், ஆனால் நிர்வாகத்தில் இருக்கும் எங்களைப் போன்றவர்களின் சிரமங்களை உணர வேண்டும்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது மிக முக்கியமான ஓர் அம்சம்.

அண்ணாமலை புதிய இயக்கம்/கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு:

அது அவருடைய ஜனநாயக உரிமை. தனக்குள்ள உரிமையை அவர் நிலைநாட்டியிருக்கிறார். வேதனையால் அவர் பாஜகவிலிருந்து விலகி வந்திருக்கிறார்; அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க அரசு தீவிரமாகப் போராடி வருகிறது. காடுகளுக்குள் வீடு கட்டித் தங்குபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது எப்படி? ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும்.

குற்றச்சாட்டுகள் வரும்போது அதை நிவர்த்தி செய்யும் பணிகளை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதேபோல், காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதைத் தடுத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்திக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சிறந்த கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

செந்தில் பாலாஜியின் கருத்துகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. பொறுப்பானவர், பொறுப்பற்றவர் என்று சொல்வதற்கு அவருக்கு எவ்வித தகுதியும் இல்லை. அவர் ஏன் அமைச்சராக நீடிக்க முடியவில்லை, அதற்கான காரணம் என்ன என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்குத் தனித்தனி கொள்கைகளும் லட்சியங்களும் இருக்கின்றன. திமுக எடுக்கும் முடிவுகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது.

இறுதியாக, பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு:

உங்களைப் போன்ற நல்ல காரியங்களைச் செய்பவர்களை ஊக்கப்படுத்துவதும், அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் அவசியமாகும். அதனைச் செய்வதே இந்த அரசின் தலையாய கடமையாகும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.