கோவை: கோவையில் புகைப்பட கலைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், தடாகம் அடுத்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (24). புகைப்படக் கலைஞரான இவர், கடந்த வாரம் வியாழக்கிழமை ஆர்டர் வந்திருப்பதாகக் கூறி ஒட்டன்சத்திரத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், அதன்பின் அவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.இதற்கிடையில், கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.போத்தனூர் ரயில்வே போலீஸார் உடலைக் கைப்பற்றிச் சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அது காணாமல் போன பிரவீன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பிரவீன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவே அனைவரும் நினைத்த நிலையில், கோவை நீதிமன்றத்தில் கரூரைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, நாங்கள் தான் பிரவீனைத் திட்டமிட்டுக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசினோம் என்று சரண் அடைந்தனர்,
மனோஜ் மற்றும், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலமாகக் காதலித்து வந்து நிலையில், புகைப்படக் கலைஞர் பிரவீன் நெருக்கமாகப் பழகியதால், போட்டோ சூட் என்ற பெயரில் ஒட்டன்சத்திரம் வரவழைத்து, அவருக்கு மது வாங்கிக் கொடுத்து, காரில் வைத்து கொலை செய்ததாகவும்,மேலும் பிரவீனின் உடலை கோவை கிணத்துக்கடவு அருகே தண்டவாளத்தில் வீசி எரிந்துவிட்டு, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் பிரவீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு திரண்ட பிரவீனின் உறவினர்கள், பிரவினும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் மனோஜ் எதற்காக பிரவீனை திட்டமிட்டு கொலை செய்தார் என்பது தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டியும் இந்த வழக்கில் காவல்துறை மிகவும் எத்தனை போக்குடன் கையாண்டதாக கூறி திடீரென மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்து சிங்காநல்லூர் ஹோப் காலேஜ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியதை தொடர்ந்து சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டனர்.





